இது நடந்தது பல வருடங்கள் ஆகியிருந்தாலும் இன்று பயணத்தில் இந்த சம்பவம் ஞாபகம் வந்தது.
தீபாவளி விடுமுறை முடிந்து இரவு கோவையிலிருந்து அலுவல் நகருக்கு போகும் தொலைதூர பேருந்தை பிடிக்க கோவையின் நகரப்பேருந்து ஒன்றில் போய்க்கொண்டிருந்தேன், அதில் இருக்கைகள் மழையால் நனைந்திருந்தன,அரசாங்கத்தையும் மழையையும் திட்டுவதை தவிர வேறு ஒன்றும் பெரிதாக செய்யத் துணிவதில்லை நாம் அதனால் இருப்பதிலேயே நனையாத ஓர் இருக்கையை தேடினேன் ஆனால் அனைத்தும் நனைந்திருந்தன எனவே குறைவாக நனைந்திருந்த இருக்கைகளில் ஒன்றை பார்த்து அதன் நனையாத பகுதியில் ஓரமாக அமர்ந்து கொண்டேன். ஒரு நிறுத்தத்தில் 50-55 வயது மதிக்கத்தக்கவர் தனது மகளுடன் ஏறினார். கையில் உடமைகளை பார்த்தால் அவர்களும் தொலைதூர பயணம் மேற்கொள்பவர்கள் போல் தெரிந்தது.

காந்திபுரம்
மகள் டாடி டாடி என்று கூறிக்கொண்டிருந்தார்.இருக்கையின் ஓரமாய் அமர்ந்ததால் அவர்கள் பேசுவது கொஞ்சம் என் காதிலும் விட்டு விட்டு விழுந்தது. மகள் சமீபத்தில்தான் கல்லூரி முடித்து ஏதோ பெருநகர தகவல் தொழில்நுட்பக் குட்டையில் விழுந்திருப்பார் போல் தெரிந்தது. தந்தை மிகுந்த கரிசனத்தோடு மகளின் முகத்தை பார்த்துப் பார்த்து பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் இணையத்தை பற்றி பேசிக் கொண்டு இருப்பது தெரிய வந்தது, நல்ல தெளிவாகவும் வேகமாகவும் இணையதளத்தில் தொடர்பு கொள்ள வைஃபை வேண்டும் என மகள் கூறினார், அப்பா அதற்கு அவருக்கு தெரிந்த ஒருவர் என்னேரமும் இணையத்தை தொடர்புகொள்ள ஒரு பொருட்களை 3000 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக கூறி(அவர் உத்தேசித்தது யூ. எஸ். பி டேட்டா கார்டு என புரிந்தது) அதுவா வேண்டும் என கேட்டார். அதற்கு மகள் ஏதோ தன்னிடம் கேட்க கூடாத கேள்வியை கேட்டது போல முகத்தை வைத்துக்கொண்டு பதில் கூறாமல் ஜன்னல் ஓரம் தலையை திருப்பிக்கொண்டார். அப்பா அப்பாவியாக ஒருவித குற்ற உணர்ச்சியுடன் தனது அலைபேசியை எடுத்து யாரையோ அழைத்து தன் மகளுக்கு விளக்குவதற்காக அந்த பொருளின் விவரத்தை கேட்டார். இப்பொழுதும் மகள் அப்பாவை சட்டை செய்யாமல் முகத்தை திருப்பிக்கொண்டார். அடுத்தமுனையில் உள்ளவரின் குரல் நான் எவ்வளவு ஓரத்தில் அமர்ந்தாலும் கேட்காதல்லவா அதனால் அதை விட்டுவிட்டேன். 🙂 🙂
ஏதேதோ கேட்டுவிட்டு அறைகுறையாக தனக்கு புரிந்தவற்றை பரிதாபமாக, முகத்தை திருப்பிக்கொண்டுள்ள தன் மகளிடத்தில் தனக்கு புரிந்ததை கூறினார், அதை செவி கொடுத்து கேட்கும் மனப்பக்குவத்தில் மகள் இல்லை. அப்பா சொல்லவருவது எது என என்னைப் போல் ஊகித்தார் போலும் அதனால் “அது இல்ல, நான் சொல்றது வைஃபை” என ஒற்றை வரியில் சொல்லிவிட்டு ஜன்னலோர இருட்டில் எதையோ தேடித் திரும்பிக்கொண்டார்.
அப்பா மீண்டும் தயக்கத்தோடு “வைஃபை-ன்னா என்னம்மா” என்றார் தான் இவ்வளவு பெரிய மகளுக்கு தந்தை ஆகியும் தனக்கு இந்த பொருளைப்பற்றி தெரியவில்லையே என பெரும் குற்ற உணர்ச்சியுடன். மகளிடத்து இருந்து இந்த முறை முகம் திரும்பாமல் பதில் வந்தது “அதெல்லாம் உங்களுக்கு தெரியாது, பேசாம வாங்க” என்று. அப்பாவும் அதற்கு மேல் தனக்கு ஒன்றும் புரியாது என தீர்மானித்து அமைதியாகி விட்டார். எனது மனம் கனத்து விட்டது.

ஒரு விசயத்தை ஒருவர் புதிதாக தெரிந்து கொள்ளும்போது அதன்மீது கேட்பவர் ஆர்வம் காட்டவில்லை என்றால் சொல்லித்தருபவருக்கு மிக மிக கடினம் ஆனால் ஆர்வமாக கேட்பவருக்கு சொல்லித் தருவது என்பது உருகிய வெண்ணெயில் கத்தியை செருகுவது போலாகும்.
இந்த தந்தையை கண்டால் ஒரு நல்ல நிலையில் உள்ள அடிப்படை ஆங்கில அறிவும் வெளியுளக அறிவும் உள்ளது போல் தோன்றியது. மேலும் இணையம் என்றால் என்ன எனவும் தெரிந்திருக்கிறது, இப்படிப்பட்டவருக்கே அதுவும் சிறு வயது முதல் தான் ஒவ்வொன்றும் கற்றுக்கொண்ட தனது அப்பாவுக்கே தான் தினமும் சுமார் 15 மணிநேரமும் பிரியாமல் உபயோகிக்கும் ஒரு பொருளை பற்றி எளிதாக விளக்க இவ்வளவு சங்கடப்படும் மகள் ஐ.டி குட்டையில் எப்படி நீந்துவாரோ என நினைத்துக் கொண்டேன்.
இதை ஒற்றை வரியில் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கம்பியில்லாமல் அலைபேசி போன்ற மின்னணு சாதனங்களில் இணையத்தை தொடர்பு கொள்ள உதவும் பொருள் என சொல்லியிருக்கலாம்.
இன்றைய தலைமுறையினர் “நிறைய பேர்” தன் முந்தைய தலைமுறையை முட்டாள்கள் என கருதி தனது ஆகச்சிறந்த முட்டாள் தனத்தை வெட்ட வெளியில் வெட்கமில்லாமல் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது பதம்.!